உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 7ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சுகாதாரத்தை கடைபிடிப்பது மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அதனையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் சுகாதாரம் குறித்த மணற்சிற்பங்களை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா உறுதியான மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்ததில் இதுவரை ஒமைக்ரான் XE வகை கொரோனா தமிழகத்தில் உறுதியாகவில்லை. பொதுமக்கள் வீண் பதற்றமடைய வேண்டாம், உருமாறுவது வைரசின் இயல்பு என்றார்.
மேலும், மாஸ்க் அணிவது குறித்து மக்களிடையே தவறான புரிதல் உள்ளது. பொது இடத்தில் மாஸ்க் அணிய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 110 கோடிக்கு மேல் இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்திற்காக பயந்து மாஸ்க் அணிவதற்கு பதிலாக மக்கள் விழிப்புணர்வு புரிதலோடு மாஸ்க் அணிய வேண்டும். புதிய வகை கொரோனா எச்சரிக்கை உள்ளதால் பாதுகாப்பு விதிகளில் அலட்சியம் வேண்டாம், பொது இடங்களில் அனைத்து விதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 3.2 லட்சத்திலிருந்து 3.8 லட்சம் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு ஏற்ப தான், தினசரி கொரோனா சோதனை செய்யப்படுகிறது . தேவைப்பட்டால் தினசரி சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது என எண்ணக்கூடாது. இன்னமும் 20 - 30 பாதிப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்க விட வேண்டாம்.
Read More : அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதலா? - ஜெயக்குமார் விளக்கம்
தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மற்றபடி முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் என கூறவில்லை. முகக்கவசம் அணியாததற்காக நிறுவனங்கள், பொதுமக்கள் என 60 லட்சம் பேரிடமிருந்து ரூ. 110 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Must Read : இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்.. வழக்கின் முக்கிய நபர் வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை
RNA வைரஸ் உருமாறுவது வழக்கம். இதனால் பதற்றமடைய வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும். விழிப்புணர்வில் மாற்றம் வேண்டாம் என்று கருதினால் தான் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க முடியும். கவனக் குறைவு இல்லாமல் இருக்கவேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவில் முதன்முறையாக கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான் XE மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.