நெல்லை கல் குவாரி விபத்தில் மாட்டிக்கொண்ட 6 தொழிலாளர்கள்.. பாறைகள் சரிவால் மீட்பு நடவடிக்கையில் தோய்வு
நெல்லை கல் குவாரி விபத்தில் மாட்டிக்கொண்ட 6 தொழிலாளர்கள்.. பாறைகள் சரிவால் மீட்பு நடவடிக்கையில் தோய்வு
கல் குவாரி விபத்து
விபத்து நடந்த நெல்லை குவாரியின் உரிமம் பெற்ற சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குவாரியை நடத்தி வரும் அரசியல் கட்சி பிரமுகர் மகனும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தால், 300 அடி பள்ளத்தில் 6 பேர் சிக்கிக் கொண்டனர். பாளையங்கோட்டை, நாங்குநேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றுவருகிறது.
மழை காரணமாக இரவு நேரத்தில் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், இரண்டு பேரை உயிருடன் மீட்புப்படையினர் மீட்டனர். மீதமுள்ளவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் அரக்கோணத்தில் இருந்து திருநெல்வேலி விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
300 அடி ஆழத்தில் காற்றோட்டம் இல்லாத பகுதியில் ஹெலிகாப்டர் இறங்க முடியாது என்பதால் குவாரி மீட்பு பணியில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடற்படையினர் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் அளித்துள்ள பேட்டியில், 2 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த கல்குவாரியில் மேலும் பாறைகள் சரிந்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து பாறை சரிந்து விழுந்து வருவதால் மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டது. இதனிடையே, விபத்து நடந்த நெல்லை குவாரியின் உரிமம் பெற்ற சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குவாரியை நடத்தி வரும் அரசியல் கட்சி பிரமுகர் மகனும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.