பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் ஒருவர் தேநீர் மொய் விருந்து நடத்தி நிவாரணம் திரட்டி வருகிறார். அவரது செயலை பாராட்டி பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள வம்பன் 4 ரோட்டில் கடந்த பத்தாண்டுகளாக பகவான் என்ற பெயரில் டீ கடை நடத்தி வந்த சிவக்குமார் என்பவர் தற்போது புதுக்கோட்டை அருகே கேப்பரை அருகே உள்ள இந்திரா நகரில் தேனீர் கடை நடத்தி வருகிறார். கஜா புயல் பாதித்த போது அப்பகுதி மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சிவக்குமார் தனது டீ கடையில் வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார்.
மேலும் அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்த பகுதி வறட்சியான சூழ்நிலையை உணர்ந்து செம்மரம், சந்தன மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய சிவகுமார் கடந்த கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பொது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கி வருகினார்.
பின்னர் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் போது டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உயிருக்குப் போராடி வரும் மக்களை காக்க ஆக்சிஜன் வழங்குவதற்காக இவர் கடையில் தேநீர் மொய் விருந்து நடத்தி கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நிவாரணம் திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். தற்போது பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் பலரும் அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவ சிவக்குமார் தனது கடையில் தேநீர் மொய் விருந்து நடத்தி நிவாரணம் திரட்டி வருகிறார். அதன்படி, இன்று தனது கடையில் தேனீர் குடிப்பவர்களிடம் எந்த ஒரு தொகையும் வாங்காமல் ஸ்ரீலங்கா நாட்டு மக்களுக்காக உதவி கரம் நீட்ட நிவாரணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் வசூலிக்கப்படும் தொகையை வாய்ப்பிருந்தால் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கொடுப்பேன் என்றும் இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மூலம் வசூல் செய்த தொகையை வழங்குவேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சதம் அடித்த தக்காளி.. பீன்ஸ் ரூ.110க்கு விற்பனை: கோயம்பேட்டில் காய்கறிகளின் இன்றைய விலை எவ்வளவு?
அவர் கடையில் தேநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட அவர்களால் இயன்ற நிவாரண தொகைகளை வழங்கி டீக்கடை உரிமையாளர் சிவகுமாரை பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: ரியாஸ் - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Puthukkottai, Sri Lanka