கிரண் பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு புதுவை முதல்வர் தர்ணா!

ஹெல்மெட் விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக மக்களைத் துன்புறுத்துவதால், தர்ணாவில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

கிரண் பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு புதுவை முதல்வர் தர்ணா!
தர்ணா போராட்டத்தில் நாராயணசாமி
  • News18
  • Last Updated: February 13, 2019, 10:30 PM IST
  • Share this:
புதுச்சேரி துணைநிலை ஆளுநரைக் கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டத்தை அடிப்படையாக அமல்படுத்த வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அதைக் கட்டாயப்படுத்தி காவல்துறை மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கருப்புச் சட்டை அணிந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புத் துண்டு அணிந்தும் வெளியே வந்தனர்.

சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி இவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அங்கு ஆளுநர் மாளிகை எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் ஆளுநர் மாளிகை முன்பு திரண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ‘‘புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தடையாக உள்ளார், அவரது ஏஜெண்டாக செயல்படும் கிரண்பேடி, அரசின் அன்றாட நிகழ்வில் தடையாக இருக்கிறார். அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வந்தாலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தோம். தற்போது ஹெல்மெட் விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக மக்களைத் துன்புறுத்துவதால், தர்ணாவில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

வரும் பிப்ரவரி 21-ம் தேதி காலை 10 மணிக்கு தம்மைச் சந்திக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி நேரம் ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்