• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 105 வயது வரை ஆரோக்கியமாக வாழும் மக்கள்: தமிழகத்தில் ஒரு அதிசய சைவ கிராமம்!

105 வயது வரை ஆரோக்கியமாக வாழும் மக்கள்: தமிழகத்தில் ஒரு அதிசய சைவ கிராமம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஊர் மக்கள் அனைவருமே சைவமாக உள்ள ஒரு அதிசய கிராமம் இருக்கிறது. கடந்த 55 வருடங்களாக இந்த கிராமத்தில் உள்ளவர்கள் சைவ உணவுகளையே உட்கொண்டு வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே ஆலங்குடி, வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 1963-ம் ஆண்டிற்கு முன்னர் சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர்.

    1963-ம் ஆண்டு கிராமத்திற்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்ற சாமியார், மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறியுள்ளார். அதிலிருந்து அந்த கிராம மக்கள் சைவத்திற்கு மாறியுள்ளனர். கிராமத்தில் கோழி, ஆடு, வளர்த்தால் தானே அசைவ ஆசை வரும் என்பதால் ஆடு கோழி வளர்ப்பதையும் விட்டுவிட்டனர்.

    பசுமாடுகளை மட்டும் வளர்த்து வருகின்றனர். கண்மாயில் மீன் வளர்த்தாலும் அவற்றை அவர்கள் பிடிப்பது இல்லை. அசைவம் சாப்பிடாத இந்த கிராமத்தினர் டாஸ்மாக் பக்கமும் செல்வதில்லை. இங்குள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மது வாடையே இல்லை என்று பெருமை பொங்கக் கூறுகின்றனர்.

    ஆண்களை திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் அசைவமாக இருந்தால், சைவத்திற்கு மாறி விடுகின்றனர். இவர்களின் திருமணமும் வேத மந்திரங்கள் எதுவுமின்றி மிக எளிமையான முறையில்தான் நடைபெறுகிறது. திருமணத்திற்கு வரதட்சணை வாங்குவதில்லை.

    இந்த கிராமத்தில் அடி, தடி, சண்டை என போலீஸ் ஸ்டேசன் பக்கம் யாரும் சென்றதில்லை என்கிறார்கள். இவர்களில் பலர் 80 வயது முதல் 105 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: