புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இன்று வீட்டில் சிறுவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, வீட்டின் கூரையை துளைத்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தால் கிராமத்தில் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மேலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் செயல்பட தற்காலிகமாக அவர் தடை விதித்துள்ளார். கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த சிறுவனுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவ குழுவினர் தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து சிறுவன் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுவனின் தாய் கூறுகையில், நானும் மகனும் வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்த போது, முதலில் வேகமாக என் தலை மீது ஏதோ சென்றது. அடுத்த நொடியே மீண்டும் சத்தம் வந்தது. அப்போது உடனே மகன் பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் விழுந்தான், என்வென்று பார்ப்பதற்குள் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது. எங்களால் என்ன என்றே யோசிக்க முடியவில்லை எனவும், தனது மகனை எப்பாடியாவது காப்பாற்றி கொடுங்கள் என கண்ணீர் சிந்துகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.