புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானத்தை மீறி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் செயல்பட்டு வந்த இரண்டு அரசு மதுபான கடைகள் 2017 ஆம் ஆண்டு மக்களின் போராட்டத்தின் காரணமாகவும் அங்கு உள்ள பெண்கள் அந்த கடைகளை அடித்து நொறுக்கியதன் விளைவாகவும் மூடப்பட்டது. மேலும் இனிமேல் அக்கிராமத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது எனவும் அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இனிமேல் அங்கு டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் எனவும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அக்கிராமத்தில் டாஸ்மாக் கடை ஒன்றைத் திறக்க முயல்வதாக வந்த தகவலின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிராமசபை தீர்மானத்தையும் மீறி கொத்தமங்கலம் கிராமத்தில் மீண்டும் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திடீரென திறக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் சாந்தி தலைமையில் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானத்தையும் மீறி சட்டவிரோதமாக டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி கொடுத்துள்ளதாகவும் இதுகுறித்து அடுத்த கட்டமாக கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி முற்றுகை மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது பிராந்தி கடை வேண்டாம். அமைச்சரை கண்டிக்கின்றோம், கொத்தமங்கலம் ஊராட்சியில் டாஸ்மாக் வேண்டாம். கிராம சபை தீர்மானத்தை அமல்படுத்து என கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர் : ர.ரியாஸ்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.