கறம்பக்குடி அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியிலுள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 11 வயதான சிறுமி ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த மாதம் கணித ஆசிரியர் சீனியப்பா என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்பின்பு அந்த சிறுமி பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்த நிலையில் இது குறித்த சிறுமியின் உறவினர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.
அப்போது தனக்கு கணித ஆசிரியர் சீனியப்பா பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தியிடம் பள்ளி தலைமையாசிரியர் மூலம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பள்ளி ஆசிரியரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு அந்த பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீனியப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கறம்பக்குடி அருகே ஆறாம் வகுப்பு மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: ரியாஸ் (புதுக்கோட்டை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.