புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு
அரிய ‘பாம்பே குரூப்’ ரத்தம் தேவைப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து ரயில் மூலம் ரத்தம் கொண்டு வரப்பட்டு அப்பெண்னுக்கு செலுத்தப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்ட நிகழ்வு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவருக்கு தீவிர இரத்த சோகை இருந்ததால் கடந்த 5ஆம் தேதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கருசிதைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டியிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையில் 10 லட்சம் பேரில் நால்வருக்கு மட்டுமே இருக்கும் அரிய வகையான ‘பாம்பே குரூப்’ ரத்தம் அந்தப் பெண்ணுக்கு இருப்பது தெரியவந்தது.
மேலும் மகப்பேறு மருத்துவ குழுவினர், அவருக்கு தீவிர இரத்த சோகை இருப்பதை உறுதி செய்ததுடன், சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டறிந்தனர். எனவே அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி அவர்களின் வழிகாட்டுதலின்படி சிகிச்சைமுறை வகுக்கப்பட்டது.
மேலும், மருத்துவர் குழுவினர் அரிய ‘பாம்பே குரூப்’ ரத்தம் தமிழ்நாட்டில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, பல்லவன் ரயில் மூலம் இரத்தத்தை விரைவாக கொண்டு வந்து அந்தப் பெண்மணிக்கு செலுத்தினர்.
அந்தப் பெண்மணிக்கு டயாலிசிஸ் மேற்கொள்ள இரண்டாவது யூனிட் ரத்தம் தேவைப்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து நேற்று ரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது அப்பெண்மணியின் உடல்நலத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார்.
இந்நிலையில், உரிய நேரத்தில் சரியான முறையில் அரியவகை ‘பாம்பே வகை’ ரத்தம் 2 யூனிட்டுகள் ரத்தசோகை சரி செய்வதற்கு கிடைத்திட விரைந்து செயல்பட்ட ரத்த வங்கி குழுவினரையும் நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மகப்பேறு மற்றும் மருத்துவ குழுவினரையும் மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார்.
Must Read : இந்தியாவில் குறைந்து கொண்டே வரும் ஃபெர்டிலிட்டி ரேட் : என்ன காரணம்..?
மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரியவகை இரத்தத்தை இரயில் மூலம் சென்னையில் இருந்து வரவழைத்து உடனடியாக செலுத்தி அவரின் உயிரை காத்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பாம்பே குரூப்’ ரத்தம்:
இந்த ரத்தப் பிரிவை, 1952-ம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே (Dr. Y. M. Bhende) என்பவர்தான் முதன்முதலில் கண்டறிந்தார். இந்த வகை முதன்முதலில் கண்டறியப்பட்டது பம்பாயில் என்பதால், இந்த 'HH' ரத்தப் பிரிவு , 'பாம்பே குரூப்' என்று அழைக்கப்படுகிறது. பத்து லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - ர.ரியாஸ், புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood, Pudukottai