Pudukkottai District | பீரோ சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து கை கால்கள் கட்டப்பட்டுள்ள ஆயிஷா பீவி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மனைவியிடம் கத்திமுனையில் 100 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (52) இவர் ஆப்டிக்கல் கடை உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆயிஷா பீவி இருவருக்கும் ராஜாமுகமது, சேக் அப்துல்காதர், பர்கானா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். மகள் பர்கானாவிற்கு திருமணமான நிலையில் மகன்கள் இருவரும் பரமக்குடியில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வந்துள்ளனர்.
கணவன் மனைவி இருவர் மட்டும் ஆவுடையார்பட்டினத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசவில் தொழுகையை முடித்துவிட்டு, வீட்டின் முன்பக்க வராண்டாவில் உட்கார்ந்து முகமது நிஜாம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டின் சுற்றுச்சுவரை எகிறி குதித்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் முகமது நிஜாமின் கழுத்தை கரகரவென அறுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்துள்ளார். அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள் மனைவி ஆயிஷா பீவியின் கைகால்களை கட்டி போட்டுவிட்டு, பீரோ சாவியை தரும்படி கேட்டுள்ளனர்.
அவர் தர மறுக்கவே இரத்தக்கரையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதில் உயிருக்கு பயந்த ஆயிஷா பீவி பீரோ சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். கை கால்கள் கட்டப்பட்ட ஆயிஷா பீவி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலையடுத்து வந்து பார்த்த உறவினர்கள் முகமதுநிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டினுள்ளே கட்டப்பட்டு இருந்த ஆயிஷாபீவியை காப்பாற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் சம்பவம் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் வழக்கு பதிந்த மணமேல்குடி காவல்த்துறையினர் தொழில் அதிபர் நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோத காரணங்கள் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்துவிட்டு 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ராஜசேகரன் ஆத்மநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.