புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் தண்ணீர் கேனில் அடைத்து குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தற்காலிக பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அம்மா குளத்தில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் ஒன்று மிதந்துள்ளது. அதனை நாய்கள் சில இழுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து அந்த குழந்தையின் சடலத்தை கரைக்கு எடுத்து வந்து பார்த்தபோது அந்த குழந்தை சில நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை என்பதும் மூன்று நாட்களுக்கு முன்பு அந்த குளத்தில் 20 லிட்டர் வாட்டர் கேனில் வைத்து அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த பச்சிளம் குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதன்பின் குழந்தையின் சடலத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசி சென்ற நபர்கள் குறித்து அந்த பகுதியில் விசாரித்துவருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநின்றவூரில் திமுக சார்பில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடதெரு கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு தேங்கிய மழைநீரில் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று கந்தர்வகோட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள குளத்தினுள் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை குளத்தில் வீசிய சம்பவமும் அந்தக் குழந்தை தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.