• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி இடைத்தேர்தல்: கவுன்சிலர் பதவிக்கு அதிமுக- பாஜக மோதல்!

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கவுன்சிலர் பதவிக்கு அதிமுக- பாஜக மோதல்!

அதிமுக மனு தாக்கல்

அதிமுக மனு தாக்கல்

அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலருக்கான 9வது வார்டில் அதிமுக சார்பில் அழகுசுந்தரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கடைசி நேர திருப்பமாக, அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த சாந்தரும் மனு தாக்கல் செய்துள்ளார்.

  • Share this:
புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக- பாஜக போட்டியிடுகின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 22 வார்டுகளைக் கொண்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில் (மாவட்ட கவுன்சிலர்)  11இடங்களில் திமுகவும் 9 இடங்களில் அதிமுகவும் இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.

மாவட்ட தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் பெரும்பான்மை இருந்தும் திமுக தலைவர் பதவியை இழந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்கள், திமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் என 3 பேர் கட்சி மாறி  அதிமுகவிற்கு  வாக்களித்தனர். இதையடுத்து  அதிமுகவை சேர்ந்த ஜெயலட்சுமி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பான்மை இருந்தும் திமுக கூட்டணி தலைவர் பதவியை இழந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் புதுக்கோட்டையில் காட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்,  ஜெயலட்சுமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, அதிமுகவிற்கு அதிர்ச்சியளித்தார்.

மேலும் படிக்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 97,831 பேர் வேட்பு மனு தாக்கல்!


இந்நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிக்குழு  9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்கையா கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒரு ஒன்றிய கவுன்சிலர், 5 ஊராட்சி மன்ற தலைவர்கள், 34 ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 9ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.



இதில், அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட கவுன்சிலருக்கான 9வது வார்டில் போட்டியிட திமுக சார்பில் பழனிச்சாமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக சார்பில் அழகுசுந்தரி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஊர்வலமாக வந்து அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: தாழ்த்தப்பட்டோருக்கு 61.75%, உயர்ஜாதி ஏழைகளுக்கு 47.75% கட் ஆப்: எஸ்.பி.ஐ வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!



கடைசி நேர திருப்பமாக, அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த சாந்தர் என்பவரும்  போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து  அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்திற்கு  அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளரை எதிர்த்து கூட்டணிக் கட்சியான பாஜக வும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி கூறுகையில், பாஜக மாநிலத் தலைமையின் அனுமதியோடு புதுக்கோட்டை மாவட்ட 9 வது வார்டு கவுன்சில் பதவிக்கு போட்டியிடுகிறோம். தலைமை அறிவுறுத்தி, கடிதம் கொடுத்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர் சாந்தர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் செயல்படுவோம். அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து, வேட்பு மனுவைத் திரும்ப பெற அவகாசம் உள்ளதால், கூட்டணி தர்மத்தின் படி அதிமுக அல்லது பா.ஜ.க வேட்பாளர்களில் ஒருவர் வேட்பு மனுவைத் திரும்ப பெறுவாரா? அல்லது களத்தில் மோதிக் கொள்வார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: