புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி நாகரத்தினம் ( வயது 68). இவர் கடந்த 40 ஆண்டு காலமாக புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்வது மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தேனீர் உணவு வாங்கிக் கொடுக்கும் பணிகளை செய்து அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் மூதாட்டி நாகரத்தினம் திருமணம் ஆகாத நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே பார்வையாளர்கள் தங்கும் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அரசு மருத்துவமனை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்ட வளாகத்தின் ஒரு கட்டிடத்தில் மருத்துவத்துறையின் சிக்கன நாணய சங்க அலுவலகம் திறக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிக்கன நாணய சங்க அலுவலக கட்டிடத்தில் மூதாட்டி நாகரத்தினம் தங்கி அந்த சங்க அலுவலகத்தை பராமரித்து வந்துள்ளார். இதனால் அந்த சிக்கன நாணய சங்க நிர்வாகிகள் மாதம் ரூபாய் 1000 ஊதியமாக மூதாட்டி நாகரத்தினத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் அவரது அன்றாட வாழ்க்கையை அந்த அலுவலக கட்டிடத்திலேயே நகர்த்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19 ம் தேதி இரவு நாகரத்தினத்தை யாரோ சில மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து மருத்துவமனை வளாகத்திலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதனை மறு நாள் காலை மருத்துவமனை வளாகத்திற்கு வந்த ஊழியர்கள் சிலர் நாகரத்தினம் உடலில் ரத்த காயங்களுடன் ஆடை களைந்து உயிரற்ற நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை நகர போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியோடு நாகரத்தினத்தை கொலை செய்த நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மீன் மார்க்கெட் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சம்பவத்தன்று மூதாட்டி நாகரத்தினத்தை தான் தஞ்சை மாவட்டம் அவிச்சிகோன்பட்டியைச் சேர்ந்த வீரராசு(37) என்ற மற்றொரு கொலை குற்றவாளியுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Also Read: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் கைது
இதனையடுத்து தஞ்சை மாவட்டம் விரைந்த போலீசார் அங்கு வீட்டிலிருந்த வீரராசுவையும் கைது செய்து புதுக்கோட்டை நகர காவல் அழைத்து வந்தனர்.இருவரிடமும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இருவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் சம்பவத்தன்று புதுக்கோட்டை அரசு பழைய மருத்துவமனைக்கு சென்ற இருவரும் மதுபோதையில் மூதாட்டியை தாக்கி அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகள் ஜீவானந்தம், மற்றும் வீரராசு மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டையில் மூதாட்டி ஒருவரை இரண்டு குற்றவாளிகள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ரியாஸ் ( புதுக்கோட்டை) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.