தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால் அதையும் கலைக்க முயற்சிக்கும் எச்சரிக்கை சிக்னலே புதுச்சேரி கலைப்பு- திருமாவளவன் ஆவேசம்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தால் அதையும் கலைக்க முயற்சிக்கும் எச்சரிக்கை சிக்னலே புதுச்சேரி கலைப்பு- திருமாவளவன் ஆவேசம்

திருமாவளவன், எம்பி

புதுச்சேரியில் திருமாவளவன் பேசும்போது, 'தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது; ஓட ஓட விரட்டி அடிப்போம் என்றார்.

  • Share this:
மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி அண்ணா சிலை அருகே, காங்., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமை காங்கிரஸ் அரசை திட்டமிட்டு பாஜக கலைத்ததாகவும் அதற்கு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக துணைபோயிருப்பதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் திருமாவளவன் பேசும்போது, 'தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது; ஓட ஓட விரட்டி அடிப்போம் என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “பா.ஜ., இப்போது, பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு என்ற ஜனநாயக படுகொலையை செய்து வருகிறது. புதுச்சேரியிலும் இப்படித்தான் செய்துள்ளது. புதுச்சேரியில் ஒரு இடத்தில்கூட பா.ஜ., வெற்றி பெற முடியாது.பா.ஜ.,வின் அநாகரிக அரசியலுக்கு, அ.தி.மு.க,, - என்.ஆர்.காங்., கட்சிகள் துணை போய், புதுச்சேரி மக்களுக்கு துரோகம் செய்துள்ளன. ஐந்தாண்டு காலம் ரங்கசாமி எங்கே போனார் என தெரியவில்லை.

இவர்களை, புதுச்சேரி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத் தால், அதையும் கலைக்க முயற்சிக்கும் என்பதற்கான எச்சரிக்கை சிக்னலை, புதுச்சேரியில், காங்., ஆட்சியை கலைத்திருப்பதன் மூலம், பா.ஜ., தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது. தமிழகத்தில், பா.ஜ.,வை ஓட ஓட விரட்டி அடிப்போம்” என்றார் ஆவேசமாக.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு லாஸ்பேட்டை விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கமாண்டன்ட் ரவீந்தரன் தலைமையில் 120 அதிரடி படையினரும், 350 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா மேடை, பொதுக்கூட்ட மேடை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனிடையே, தமிழக சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ‘தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது எனவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப்படுவதாகவும்’ அவர் கூறியுள்ளார்.
Published by:Muthukumar
First published: