புதுச்சேரியை சேர்ந்த ஒரு பிரபலமான பெண் தாதா நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் தாதா புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் தாதாவின் பெயர் எழிலரசி. கோடீஸ்வர சாரய வியாபாரியான ராமுவின் இரண்டாவது மனைவிதான் இந்த எழிலரசி. ராமுவின் முதல் மனைவி வினோதா. தன்னைவிட்டு பிரிந்து சென்ற ராமுவையும் அதற்கு காரணமாக இருந்த எழிலரசியையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார் வினோதா. இதில் ராமு படுகொலை செய்யப்பட எழிலரசி படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார்.
கணவரின் கொலைக்கு காரணமானவர்களை பழித்தீர்க்க சபதமெடுத்தார் எழிலரசி. இப்படியே ஒதுங்கிபோனால் தன்னுடயை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சமும் எழிலரசிக்கு இருந்தது. ராமு கொலைக்கு காரணமாக ஐயப்பன், ராமுவின் முதல்மனைவி வினோதா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். ராமுவின் கொலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. இதன்காரணமாக பொதுஇடங்களுக்கு வருவதையும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார் சிவக்குமார்.
அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. நிரவி பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். அந்த கட்டுமானப் பணிகளை பார்வையிட காரில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த எழிலரசி டீம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காரில் இருந்து தப்பி திருமண மண்டபத்துக்கு ஓடியுள்ளார். திருமண மண்டபத்தில் அவரை படுகொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. 2017-ல் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எழிலரசி புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதன்பின்னர் தாதா அவதாரம் எடுக்கத் தொடங்கினார் எழிலரசி. கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என தாதாவாக வலம்வரத் தொடங்கினார். அவர்மீது ஏராளமான கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவ்வப்போது எழிலரசி குறித்த பேச்சுகள் அடிப்படும். இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழிலரசி பாஜகவில் இணையவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இதனை மெய்பிக்கும் வகையில் புதுச்சேரி பா.ஜ.க மாநிலத் தலைவர் சுவாமிநாதனை சந்தித்து பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இதனைக்கண்ட அதிர்ச்சி அடைந்த புதுவை போலீஸார் அவர் தேடப்படும் குற்றவாளி என பா.ஜ.கவிடம் பேசியது எல்லாம் தனிக்கதை.

எழிலரசி
எழிலரசி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்தார். அவர் முறைப்படி கட்சியில் இணையவில்லை. அவர் பாஜகவின் உறுப்பினரும் இல்லை. தினமும் ஆயிரம் பேர் எங்களை சந்திக்கிறார்கள் அவர்களின் குற்றப்பிண்ணணியை ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா என்றது புதுவை பா.ஜ.க தலைமை.
இந்நிலையில் புதுவை சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக எழிலரசி அறிவித்தார். காரைக்கால் மாவட்டம் நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கினர். இதற்கிடையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வருகை புரிந்த எழிலரசி வேட்புமனு தாக்கல் செய்து விட்டு கேஷுவலாக புறப்பட்டு சென்றார்.
தேடப்படும் குற்றவாளி இப்படி ஹாயாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு திரும்புவதை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சினிமாவில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் போலீஸ் வருவதைப்போல் தாமதாக கிடைத்த தகவலால் எழிலரசியின் காரை நாகூர் அருகே வழிமறித்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.