Home /News /tamil-nadu /

Exclusive: ஆதார் குளறுபடிக்கு 45 நாள்கள் காத்திருக்க வேண்டிய சூழல்: புலம்பும் மக்கள்! களச் சூழல் என்ன?

Exclusive: ஆதார் குளறுபடிக்கு 45 நாள்கள் காத்திருக்க வேண்டிய சூழல்: புலம்பும் மக்கள்! களச் சூழல் என்ன?

ஆதார் கார்டு (கோப்புப் படம்)

ஆதார் கார்டு (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
ஆதாரில்  குளறுபடி என்றால்  திருத்தம் செய்வதற்கு  45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருக்கக்கூடிய 25-க்கும் மேற்பட்ட இ சேவை மையங்களில் ஆதார் சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் மற்ற பகுதியில் இருக்கக்கூடிய மையங்களில் குறைந்தபட்சம் மூன்று நாட்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் வளசரவாக்கத்தில் இருக்கும் ஆதார் மையத்தில் ஆதாரில் திருத்தங்களை செய்ய 45 நாட்கள் ஆகும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து வளசரவாக்கம் ஆதார் மையத்தில் நேரடியாக நியூஸ் 18 தமிழ்நாடு கள ஆய்வை செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. வளசரவாக்கத்தில் சுற்றி இருக்கக்கூடிய மதுரவாயில், போரூர், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் என 7 பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இந்த ஒரே ஒரு ஆதார் மையம் மட்டுமே இயங்கி வருகிறது.

இதனால் தொடக்கத்தில் தினசரி பணியாற்றி வந்த ஆதார் மையம்  ஊழியர்கள், தற்போது  கூட்ட நெரிசல் காரணமாக ஆதார் மையத்தின் உத்தரவோடு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை விண்ணப்பங்கள் தருவதற்கும், அந்த விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிடும் தேதியில் திருத்தம் செய்ய வேண்டிய நபர்கள் வந்தால் அவர்களுக்கு திருத்தம் செய்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் உடனடியாக ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள இயலாமல் போகிறது.

2018-ம் ஆண்டு சேவை பெறுவதற்காக வளசரவாக்கம் சென்ற நாகலட்சுமி என்ற மூதாட்டி, தான் எடுத்த ஆதார் கார்டை இதுவரைக்கும் தன் கண்ணால் கூட பார்த்ததில்லை என்றும், சரியான முகவரியில் இருந்த போதும் எனக்கு அந்த ஆதார் கார்டு வரவில்லை என்றும் தெரிவிக்கிறார். எனவே ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்காக மாதம் மாதம் இங்கே வருகிறேன் ஆனால் சரியான பதில் இதுவரைக்கும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதேபோல தன் பேரனுக்கு பள்ளியில் சேர்க்க ஆதார் கார்டு விண்ணப்பித்து தற்போதுவரை அவர்கள் ஆதார் கார்டை வழங்கவில்லை. நீங்கள் கஸ்டமர் கேர் தகவலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

ஆனால் கஸ்டமர் கேரில்  24 முறை தொடர்புகொண்டு பேச முயற்சி செய்தேன். ஒவ்வொருமுறையும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். தமிழில் பேச ஆப்ஷன் இருந்தபோதும் அந்த பொத்தானை அழுத்தினால் கூட தமிழில் பேச இணைக்க மறுக்கின்றனர். இதனால் தினசரி ஆதார் மையத்திற்கு வந்து செல்கிறேன் என்கிறார் ரகுவரன்.

இதுகுறித்து விளக்கமளித்த வளசரவாக்கம் ஆதார் மையம்,  7 கிராம மக்கள் வருகின்றனர். எனவே தினசரி கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது என்கின்றனர். ஆரம்பத்தில் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள இணையதளத்தில் பல வழிமுறைகள் காணப்பட்டது.
குறிப்பாக முகவரி திருத்தம், பெயர் திருத்தம் போன்ற விவரங்களை நாமே செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்பொழுது முகவரி திருத்தம் மட்டுமே இணையதளம் மூலம் நம்மால் செய்ய முடியும். அதுவும் நாம் பதிவு செய்த தொலைபேசி எண் நம் கையில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால், 1. ஆதார் மூலம் பணிக்கு செல்லக் கூடியவர்கள் 2. பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆதார் கார்டை பயன்படுத்த கூடியவர்கள் 3.வெளிநாட்டுக்கு செல்லக் கூடியவர்கள் 4.முதியோர் உதவித்தொகை 5.ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொங்கல் பரிசு என பல்வேறு பயன்களை பெற முடியாமல் சிக்கல்களில் தவித்து வருகின்றனர்.

இந்த ஆதார் மையத்தை விடுத்து வேறு பகுதிக்குச் சென்றால் உங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆதார் மையங்களில் திருத்தம் செய்து கொள்ளுங்கள் என்று நிராகரித்து விடுகின்றனர்.

எனவே பெருநகர மாநகராட்சி சார்பில் கூடுதலான ஆதார் சேவை மையங்களை இயக்க வேண்டும். தரமான இணையதள சேவையை வழங்க வேண்டும். ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆதார் சேவை மையத்தை துவங்க வேண்டும்.

மேலும் இணையதளத்தின் மூலம் சேவைகளை பெறக்கூடிய வகையில் எளிமையான நடைமுறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் ஆதார் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள உதவி செய்யும் வகையில் உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Aadhaar card

அடுத்த செய்தி