சென்னை : 8 மாதங்களுக்கு பின் மெரினா கடற்கரையில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதி

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதையொட்டி மெரினா கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது.

  கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

  இதனால் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை உருவானது. இதனை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்தது.

  எட்டு மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு திங்கள்கிழமை அனுமதிக்கப்பட உள்ளதால், கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். கடற்கரையில் உள்ள பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

  மெரினா கடற்கரை மீண்டும் திறக்கப்பட உள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, நடைமேடையில் இடநெருக்கடியுடன் நடைப் பயிற்சி மேற்கொண்டதாகவும், இனி வழக்கம் போல் சுதந்திரமாக பயிற்சி மேற்கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

  மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்டாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மெரினாவுக்கு வந்து செல்வது மகிழ்ச்சிதான் என, மக்கள் கூறுகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: