தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்குக - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பாதிப்பின் அளவு இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் இன்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  பிரதமரின் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  60 வயதுக்கு மேற்பட்ட 14 லட்சத்து 11 ஆயிரத்து 194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13 லட்சத்து 93 ஆயிரத்து 811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் இன்று நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டனர். நாளையும் இந்த பணி தொடர்கிறது.

  இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்துக்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

  முன்னதாக, தமிழகத்திற்கு தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்திய போது, தமிழகத்தில் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாகவும், போதுமான படுக்கைகள் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: