நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”தமிழகக் காவல் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாது தவிர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறைத் தேர்வுகளில் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு இறுதியாக நேர்முகத்தேர்வு என்று மூன்று நிலைகள் உள்ளன. தற்போதைய காவல் துணை ஆய்வாளர்களுக்கான தேர்வில் இதுவரை எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் நேர்முகத்தேர்வு நடைபெறவிருக்கிறது. ஆனால், இத்தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றாதது வன்மையான கண்டனத்திற்குரியது. இதுகுறித்து தேர்வர்கள், தேர்வாணையத்திடம் முறையிட்டபோது இறுதிப்பட்டியல் வெளியிடும்போது மட்டுமே இடஒதுக்கீடு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று ஒவ்வொரு நிலையிலும் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க முடியும். அதைவிடுத்து, தேர்வாணையம் குறிப்பிடுவது போல நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தொடக்கநிலைத் தேர்வுகளிலேயே தமிழ் வழியில் பயின்றவர்கள் புறக்கணிக்கப்படுவர்.
Also read: ரசிகர்களை பார்த்து கை அசைத்த ரஜினிகாந்த் (வீடியோ)
இதன்மூலம், தமிழ்வழியில் பயின்றவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதைக் காரணமாகக் காட்டி இடஒதுக்கீடு முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படாமல் போகவே அதிக வாய்ப்புண்டு. துணை ஆய்வாளர் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு பின்பற்றப்படும்போது, தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு மட்டும் இறுதியாக பின்பற்றப்படும் என்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அது முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.
காவல்துறையைப் போன்றே தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வனங்களைப் பாதுகாக்க தேர்வு செய்யப்படும் வனவர்களுக்கான தேர்வின் மூன்று நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுவது போலவே, துணை ஆய்வாளர் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் அத்தகைய இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதே சரியானதாக இருக்கும்.
இதுதொடர்பாக, தமிழ்வழித் தேர்வர்கள் சார்பில் கடந்த சூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இதேபோன்று தமிழ்நாடு தேர்வாணையம் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இதுவரை எத்தனை பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அளிக்க மாநில தேர்வாணையத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படாவிட்டால் ஊழல், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
ஆகவே, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதுவரை நேர்முகத்தேர்வு நடைபெறுவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Seeman