கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி 2ம் நாளாக போராட்டம்!

கோப்புப் படம்

இன்று காலையில் இருந்து தொடங்கி 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைத்து சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்

 • Share this:
  கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டாம் முறையாக சுற்றுலா தொழில் புரிவோர் கஞ்சி காய்ச்சி உணவாக அருந்தி 7 மணி நேரமாக போராடி அரசு அதிகாரிகளிடம் சமாதான பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்படவே கலைந்து சென்றனர்.

  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் சில கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக  மலை வாசஸ்தலங்களான‌ நீலகிரி, ஏற்காடு, கொடைக்கான‌ல் உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளுக்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது., இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் பெரும்பாலான பொதுமக்கள் சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர், தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தொழில் புரிவோரின் வாழ்வாதாரம் பெரிதும்  பாதிக்கப்படுவதாக கூறி இரண்டாவது முறையாக  கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுன‌ர்க‌ள் , சுற்றுலா வழிகாட்டிகள், தரை கடை வைத்திருப்பவர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  சாலையில் அமர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  இதில் சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும், சுற்றுலா தலங்கள் செல்ல‌ உள்ள‌  தடையினை நீக்க வேண்டும் என கோரிக்கைகளை  வ‌லியுறுத்தி கடைகளை அடைத்தும், சுற்றுலா வாகனங்களை இயக்காமலும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.  அதனை தொடர்ந்து கேஸ் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி கஞ்சி தொட்டி  திறக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும்  பிற்ப‌க‌லில் அரசு அதிகாரிகள் சமாதான பேச்சுவார்தையில் ஈடுபட்டனர் அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் போராட்டம் தொடர்ந்தது, அதன் பின் கஞ்சி காய்ச்சி உணவாக அருந்தி நாற்காலியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,

  இறுதியாக மீண்டும்  வட்டாச்சியர் சந்திரன், துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு  ஆவணம் செய்து வருகின்ற  திங்கள் கிழமைக்குள் அறிவிக்கப்படும்  என வட்டாட்சியர் தெரிவித்தார்.  இதில் 4 நாட்கள் வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனவும்  திங்கள் கிழமை மாலைக்குள் அரசு அதிகாரிகள் உடனே பரிசீலனை செய்து சுற்றுலா பயணிகள்  வருவதற்கு ஆவணம் செய்யவில்லை எனில் செவ்வாய் கிழமை காலை கொடைக்கானலில் அனைத்து சங்கங்கள் ஒன்றிணைந்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று  சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்  போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்,

  இன்று காலையில் இருந்து தொடங்கி 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைத்து சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர், இதில் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டம் ஆரம்பித்த நேரத்தில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தனர் நேரம் போக போக போராட்ட காரர்களும் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

  ஜாஃபர் சாதிக் - கொடைக்கானல் செய்தியாளர்
  Published by:Arun
  First published: