குடிகாரர்களால் சாலை விபத்தில் மனைவி உயிரிழப்பு! உடலுடன் 6 மணி நேரம் போராடிய மருத்துவர்

இருப்பினும், டாஸ்மாக் கடை மூடப்படும் வரை ஷோபனாவின் உடலை எடுக்க அனுமதிக்கமாட்டோம் என ரமேஷுடன் சேர்ந்து பொதுமக்களும் திட்டவட்டமாக கூறினர்.

News18 Tamil
Updated: June 25, 2019, 8:32 AM IST
குடிகாரர்களால் சாலை விபத்தில் மனைவி உயிரிழப்பு! உடலுடன் 6 மணி நேரம் போராடிய மருத்துவர்
மாதிரிப் படம்.
News18 Tamil
Updated: June 25, 2019, 8:32 AM IST
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குடிகாரர்களால் சாலை விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலுடன் ரமேஷ் என்ற மருத்துவர் இரவு 11 மணி வரை மறியல் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என வட்டாட்சியர் விஜயகுமார் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் கணவாய் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். இவரது மனைவி ஷோபனாவும், மகள் சாந்தனாதேவியும் ஜம்புகண்டி பிரிவு அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் வந்திருக்கின்றனர். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஷோபனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். சாந்தனா தேவியும் படுகாயம் அடைந்தார்.

விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்திருக்கின்றனர். மூவரும் மது போதையில் இருந்திருக்கின்றனர். இதனை அறிந்த ரமேஷ், மனைவியின் உடலுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விபத்திற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக மலைவாழ் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 11 மணி வரை தொடர்ந்தது. பெண்கள் உள்பட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை - கேரளா இடையேயான சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த காவல் துறையினரின் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், டாஸ்மாக் கடை மூடப்படும் வரை ஷோபனாவின் உடலை எடுக்க அனுமதிக்கமாட்டோம் என ரமேஷுடன் சேர்ந்து பொதுமக்களும் திட்டவட்டமாக கூறினர்.

பொதுமக்கள் தீவிரமாக போராடியதை அடுத்து வட்டாட்சியர் விஜயகுமார் நிகழ்விடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து ஜம்புகண்டி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதாகவும், நிரந்தரமாக கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் விஜயகுமார் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.

இதனை அடுத்து ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக மனைவியின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அனுமதித்த ரமேஷ், தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

Also see:

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...