நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே கட்டப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கட்டிடத்துக்கு கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அந்த கட்டிடத்துக்கு கலைவாணர் பெயர் வைக்க வேண்டும் என்ற எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து, இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளாளர் இளைஞர் பேரவை மற்றும் தென்னக மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இந்நிலையில், மாநகராட்சி கட்டடத்துக்கு கலைஞர் மாளிகை என பெயர் சூட்டியதால் எதிர்ப்பு கிளம்பியதால், பழைய பெயரே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகர்கோவில் மாநகராட்சியில் பாலமோர் பகுதியில் உள்ள பழமையான கட்டடம்
இடிக்கப்பட்டு தற்போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கான கட்டடம் புதியதாக
கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்திற்கு பெயரிடுவதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. இக்கட்டடம் ஏற்கனவே இருந்தவாறே, கலைவாணர் பெயரிலேயே அழைக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 189 மற்றும்
கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 198-ன் பிரிவு 266 (மற்ற மாநகராட்சிகளுக்கும் பொருந்த கூடியது) முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துக்களுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து
தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் / பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.