Home /News /tamil-nadu /

தார்சட்டி எடுத்து இந்தி மொழியை அழிக்கும் போராட்டம்.. கி.வீரமணி அறிவிப்பு

தார்சட்டி எடுத்து இந்தி மொழியை அழிக்கும் போராட்டம்.. கி.வீரமணி அறிவிப்பு

கி.வீரமணி

கி.வீரமணி

படியுங்கள் என்பதுதான் திராவிட மாடல். படிக்காதீர்கள் என்பது ஆரியம் என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை கொண்டு வரப்போவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 30ம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் தார்சட்டி எடுத்து இந்தி மொழியை  அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிட கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு குறித்து பிரச்சார பெரும் பயண விளக்க கூட்டம் நடைபெற்றது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்த பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, பிரதமர் மோடி விலைவாசியை குறைப்போம், 15 லட்சம் கொடுப்போம் என்றார். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து இருக்கின்றது. தேர்தல் வரும் போது மட்டும் விலையேற்றம் இருக்காது, இதனால் அடுத்த தேர்தல் எப்போது வரும் என வடமாநில மக்கள் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

டீ விலை கூட இப்போது 15 ரூபாய்க்கு உயர்ந்து இருக்கின்றது, இது தான் மோடி செய்த சாதனை என தெரிவி்த்த அவர், நீட் தேர்வு குறித்தும், புதிய கல்விகொள்கை குறித்தும் திராவிடர் கழகம் சார்பில் சிறுவெளியீடு வெளியிடப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். பா.ஜ.க மட்டுமே நீட் தேர்வை ஆதரிக்கின்றது. வேறு கட்சிகள் ஆதரிக்கவில்லை என தெரிவித்த அவர், திமுக சொன்னதை செய்யும் இயக்கம், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக  வெறும் மசோதாவை தாக்கல் செய்யவில்லை, ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு மக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை அறிக்கையாக கொடுத்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.

கடந்த முறை (அதிமுக ஆட்சியில்) இது போன்று செய்யவில்லை என தெரிவித்த அவர், 2017ல் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 12 சதவீதம் வரை மருத்துவ படிப்பில்  சேர்ந்தனர், ஆனால் நீட் தேர்வு வந்த பின்னர் தமிழ் வழி படித்தவர்கள் 1.7 மருத்துவ படிப்பிற்கு தேர்வாகின்றனர் என தெரிவித்தார்.

படியுங்கள் என்பதுதான் திராவிட மாடல். படிக்காதீர்கள் என்பது ஆரியம் எனக்கூறிய அவர், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுப்பது கட்டப்பஞ்சாயத்து செய்வதை போன்றது என்றும்,கிராம புற மாணவர்கள் பள்ளிக்கு செல்வது முன்பு 61 சதவீதமாக இருந்தது, இப்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க - Exclusive : ''மோடி - அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்பப்பெற மாட்டேன்'' - இளையராஜா திட்டவட்டம்

தேசிய கல்வி கொள்கை என்பது அசல் மனோதர்மம் எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ படிப்பிற்கு சேர சமஸ்கிருதம் தெரிந்து இருக்க வேண்டும் என்று இருந்தது, அதை ஒழித்தது திராவிட இயக்கம் எனவும் இன்று நீட் தேர்வு என்று அதை கொண்டு வந்திருக்கின்றனர்.

நாடு முழுவதும் ஓரே தேர்வு, ஓரே கலாச்சாரம், ஓரே மொழி என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பிய அவர், ஓரே சாதி என்று ஏன் அறிவிக்க வில்லை ? எனவும் கேள்வி எழுப்பினார். புதிய கல்விகொள்கை படிக்காதே என்று சொல்கின்றது எனவும் 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு என  பல தேர்வுகளை தாண்டினாலும்  மார்க்கிற்கு மதிப்பில்லை எனக்கூறிய அவர், இவற்றை தட்டிகேட்க கூடிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.

ஆளுநர், குடியரசு தலைவருக்கு நீட் மசோதாவை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கொண்டு வருவொம் என அமித்ஷா சொல்கின்றார் எனவும், இந்தி  எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் கொண்டு வர பார்க்கின்றனர் எனக்கூறிய அவர், இந்திக்கு  எதிராக தார்சட்டியை தூக்கி போராடிய இயக்கம் திராவிட இயக்கம் என தெரிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் இந்த பிரச்சார பயணம் நிறைவடைந்த பின்னர்,ஏப்ரல் 30ம் தேதி மிகப்பெரிய அளவில் தார்சட்டி எடுத்து இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும், இந்த அறிவிப்பை கோவையில் இருந்து வெளியிடுகின்றேன் எனவும் வீரமணி தெரிவித்தார்.

குலகல்வி திட்டத்தை விட மோசமாக நிலையை ஓன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் கொண்டு வருகின்றனர் எனவும், போராட்டத்தை தொடர வேண்டிய நிலை இருக்கின்றது, முதல்வர் ஸ்டாலின் இருக்கின்றார், நாங்கள் இருக்கின்றோம்  போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Dravidar Kazhagam, K.Veeramani, Neet

அடுத்த செய்தி