சென்னையில் வீட்டு வரி வசூல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ``வீட்டு வரி என்பது கட்டமைப்பு வசதிகள் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆனால், சென்னையில் அற்புதமான கட்டமைப்பு வசதிகள் கொண்ட பகுதிகளில் வசூலிக்கப்படுவதைவிட, அடிப்படை வசதிகளே இல்லாத திருவொற்றியூர் மண்டலத்தில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது.
திருவொற்றியூர் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் என்று கூறப்பட்டாலும் அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் பெரிய அளவில் செய்யப்படவில்லை. கட்டமைப்பு வசதிகளின் தரம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையாக இருக்கும் நிலையில், வீட்டு வரியின் அளவு அமெரிக்க நகரங்களுக்கு இணையாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவொற்றியூரில் வீட்டு வரி ஓரளவு நியாயமாகவே இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வீட்டு வரி கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வரி ஏழை மற்றும் நடுத்தர மக்களால் கட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. சென்னையில் பணக்கார மக்கள் வாழும் பகுதியாகவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் கருதப்படும் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட்நகர் ஆகிய பகுதிகளில் கூட சதுர அடிக்கு சராசரியாக ஒரு ரூபாய் மட்டுமே சொத்து வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத திருவொற்றியூர் பகுதியில் ஒரு சதுர அடிக்கு ரூ.4.15 வீட்டு வரியாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையின் மற்ற பகுதிகளில் இருப்பதைவிட திருவொற்றியூரில் நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறு மதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்த கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால், ஆண்டு வரியாக ரூ.2000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம்.
எனவே, மக்களின் சுமைகளை உணர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டு வரியை சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாக குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக கையூட்டு வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, House Tax, PMK, Ramadoss, Thiruvotriyur