800 படத்தில் நடித்தால் விஜய் சேதுபதி வீடு முற்றுகையிடப்படும் - பேராசிரியர் கல்யாண சுந்தரம் எச்சரிக்கை

விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி பின்வாங்கவில்லை எனில் அவர் வீட்டையும், இயக்குனர் ஸ்ரீபதி வீட்டையும் முற்றுகையிட போவதாக பேராசிரியர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் இன்று கோவையில் பேட்டியளித்தார். அப்போது  இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு இன அழிப்பு செய்யதை கண்டித்து பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக  இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால் எந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதோ, எந்த நாட்டின் அணியை தமிழகத்திற்குள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்க மறுத்தாரோ அந்த நாட்டின் கொடியை நெஞ்சில் சுமந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது ஏற்க முடியாது என தெரிவித்தார்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு போர் முடிந்தநாள்தான் என் வாழ்க்கையின் சிறந்த நாள் என்று சொன்னவர் முத்தையா முரளிதரன். தமிழ்தேசிய இனம் சந்தித்த இனப்படுகொலையை நியாயப்படுத்த விஜய்சேதுபதி துணை போகின்றார் என்பதுதான் உண்மை.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் முடிவில் இருந்து விஜய் சேதுபதி பின்வாங்க மறுத்தால் அவரது வீட்டையும், இயக்குனர் ஸ்ரீபதி வீட்டையும் தமிழ்  உணர்வு கொண்ட இளைஞர்களை திரட்டி  முற்றுகையிடுவோம் என தெரிவித்தார்.


மேலும் படம் திரையிடப்படும் திரையரங்கங்களும்  முற்றுகையிடப்படும் எனவும் இனி தமிழகத்தில் விஜய்சேதுபதி படங்கள் திரையிட முடியாத நிலையை ஏற்படுத்துவோம்  என தெரிவித்தார். இலங்கையில் நடந்தது இப்படுகொலை என தெரிந்தும் முரளிதரன் வேடத்தில் நடித்து, நடிகர் விஜய் சேதுபதி வரலாற்று பழியை சுமந்து விட கூடாது எனவும்  பேராசிரியர்  கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: