பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது, 70 ஆண்டுகளாக கட்டிக்காத்த சொத்துக்களை ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி செய்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழகத்தில் உள்ள ஊட்டி ரயில் வழித்தடம் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகிய சொத்துக்களும் மத்திய அரசின் முடிவால் விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனவே பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய அரசு நிதி ஆயோக் அமைப்பு எடுத்த முடிவின்படி அரசு, தனியார் பங்களிப்போடு பொதுத்துறை நிறுவனங்களை நடத்தும் முயற்சியாக தனியாருக்கு பொதுத்துறை நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
Must Read : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை எதுவும் நடைபெறவில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஊட்டி ரயில் வழித்தடம் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு பகுதி ஆகியவையும் இதில் அடங்கியிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. லாபகரமாக இயங்கி வரும் பொதுத் துறை தொழில் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வது என்பது தேவையற்றது. அதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும், எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் என்பது அனைவருடைய சொத்து. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் தான் விளங்கி வருகின்றன.
லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் நலன் கருதி இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. எனவே பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.