முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது.. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது.. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு!

பள்ளி பேருந்து, போலீஸ் வாகனத்துக்கு தீ வைப்பு

பள்ளி பேருந்து, போலீஸ் வாகனத்துக்கு தீ வைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டத்தையும் அறிவித்துள்ளது.

  • Last Updated :

தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13-ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

4வது நாளான இன்று அவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம்‌, சின்ன சேலத்தில்‌ இயங்கி வரும்‌ சக்தி மெட்ரிக்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ விடுதியில்‌ தங்கி பயின்று வந்த பனிரெண்டாம்‌ வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13.07.2022 அன்று பள்ளியின்‌ விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்‌.

பள்ளி மாணவியின்‌ மரணத்தில்‌ சந்தேகங்கள்‌ இருப்பதாக கூறி அவரது பெற்றோர்‌ மற்றும்‌ உறவினர்கள்‌ போராட்டத்தில்‌ ஈடுபட்டு வந்தனர்‌.

நான்காவது நாளான இன்று (17.07.2022) பெற்றோர்கள்‌ என்ற போர்வையில்‌ மேற்கண்ட பள்ளிக்குள்‌ சில சமூக விரோத கும்பல்‌ அத்துமீறி நுழைந்து பள்ளியின்‌ மீது ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்சியால்‌ பள்ளியின்‌ பாதுகாப்பிற்கு வந்த காவல்‌ துறையினரை கல்‌ வீசி தாக்கியும்‌ மற்றும்‌ காவல்துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும்‌, பள்ளியின்‌ உடைமைகளை கட்டிடம்‌ தவிர மற்ற அனைத்து உடைமைகளையும்‌ (மாணவர்களின்‌ சான்றிதழ்கள்‌ உட்பட) கடுமையாக சேதப்‌ படுத்தியும்‌ வன்முறையில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. இது தொலைக்காட்சியின்‌ வாயிலாக அனைவருக்கும்‌ தெரிந்தது. தற்போது அந்த பள்ளியில்‌ பயிலும்‌ 5000 மாணவர்களின்‌ பாதுகாப்பு கேள்விக்‌ குறியாக மாறி உள்ளது.

தவறு செய்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டிக்கப்பட வேண்டும்‌ என்பதில்‌ எந்தவித மாற்று கருத்தும்‌ எங்களுக்கு இல்லை. அதற்காக இது போன்று நிகழ்த்தப்படும்‌ வன்முறைகளை ஒருபோதும்‌ ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்நிலையில்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கும்‌, பள்ளியின்‌ உடைமைகளுக்கும்‌ அதில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌, ஊழியர்கள்‌ அனைவரின்‌ பாதுகாப்பு தற்போது கேள்விக்‌ குறியாக மாறி உள்ளது. மேற்கண்ட நிகழ்வை இன்று தொலைகாட்சியின்‌ வாயிலாக பார்த்த பெற்றோர்களுக்கு தங்கள்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பு குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு தனியார்‌ பள்ளிகள்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌ மேற்கண்ட பள்ளியில்‌ வன்முறையில்‌ ஈடுபட்டவர்கள்‌ மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும்‌ மற்றும்‌ பள்ளிகளின்‌ பாதுகாப்பினை கருத்தில்‌ கொண்டு இனி வரும்‌ காலங்களில்‌ இது போன்று நிகழாத வகையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள தனியார்‌ பள்ளிகளின்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ நாளை (18.07.2022) கருப்பு வண்ண பேட்ஜ்‌ அணிந்து அந்தந்த மாவட்டங்களில்‌ உள்ள ஆட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கணர்கானிப்பாளர்‌ அவர்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதால்‌ நாளை தமிழக முழுவதும்‌ உள்ள தனியார்‌ பள்ளிகள்‌ இயங்காது என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Kallakurichi, Private schools