தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திர
மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
அரியலூர்,
திருவள்ளூர்,
கள்ளக்குறிச்சி,
திருப்பூர்,
நீலகிரி,
நாகை மற்றும்
நாமக்கல் மாவட்டங்களிலும்,
திண்டுக்கல்,
கிருஷ்ணகிரி,
ராமநாதபுரம், விருதுநகரிலும் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசு வழங்கிய 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயுடன், ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஏற்கனவே 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மூலம் 5 ஆயிரத்து 125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளால், ஆயிரத்து 450 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி, விருதுநகரில் பிரமாண்ட விழாவில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால், மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடியே 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
அதோடு, மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டடத்தையும் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலியில் பங்கேற்கிறார். முன்னதாக காலை 11 மணிக்கு புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழாவையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
Must Read : ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுச்சேரியில் 122 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையமும் பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது. புதுச்சேரியில் 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திறந்த வெளி திரையரங்குடன் கூடிய காமராஜர் மணி மண்டபத்தையும் காணொளி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.