தாராபுரம் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி பேச்சுக்கு பிரதமர் மோடி கண்டனம்

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் மோடி

தாராபுரம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி ஆகியோரின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. காங்கிரஸ், தி.மு.க வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது. காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் காலவதியான 2ஜி ஏவுகணையை ஏவியுள்ளனர். அவர்களுடைய தாக்குதல் என்பது பெண்கள் மீது உள்ளது. நான், அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாத சகோதர, சகோதரிகளின் நிலத்தில் இருக்கிறேன். தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைமைகள் அவர்களுடைய கட்சித் தலைவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள், பெண்களை அவதூறாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

  காங்கிரஸ் மற்றும் தி.மு.க தமிழக முதல்வரின் மரியாதைக்குரிய அம்மா குறித்து அவதூறாக பேசியுள்ளனர். கடவுளே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள். பெண்களை இழிவாக பேசுவது காங்கிரஸ், தி.மு.கவின் கலாச்சாரமாக இருப்பது வருந்தத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் லியோனி, பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். தி.மு.க தலைமை அதனைக் கண்டிக்கவில்லை. மூத்த தி.மு.க தலைவர்களை ஓரம்கட்டி வந்துள்ள இளவரசர் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

  1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்டது குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை. தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெண்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியாது. அவர்களுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: