பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரவுள்ளார். சுமார் 2 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் சாலை மார்க்கமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.
பலத்த பாதுகாப்பு
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில், 5 கூடுதல் ஆணையர்கள், 8 இணை ஆணையர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள், 29 துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள், சட்டம் ஒழுங்கு போலீசார், குற்றப்பிரிவு போலீசார், போக்குவரத்து போலீசார், சிறப்பு பிரிவு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், கமாண்டோ வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் என மொத்தம் 22,000 காவலர்களோடு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் செல்லும் வழித் தடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், நிகழ்ச்சி நடைபெறும் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளிநல்லா வான்வழி வாகனங்கள் பறக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.
பிரதமர் வருகை:
பிரதமர் நரேந்திரமோடி இன்ற பிற்பகல் 3.55மணியளவில் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஐ.ஏ.எப், பி.பி.ஜே விமானத்தில் புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
திட்டங்களை தொடங்கி வைக்கிறார்:
ரூ.760 கோடி செலவில் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட உள்ள எழும்பூர் இரயில் நிலைய சீரமைப்பு பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
ரூ.256 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம்-செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ. தூரத்துக்கு 3ஆவது பாதை.
ரூ.450 கோடி செலவில் 90.4 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மதுரை-தேனி அகலப்பாதை திட்டம்.
தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் மதுரை-தேனி வழித் தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயுவை கொண்டு செல்வதற்காக, 1,445 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,760 கோடி மதிப்பில் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இடையே திரவ இயற்கை எரிவாயு பைப்லைன் தடம்.
பெங்களூரு - சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல்.
சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவுக்கும் அடிக்கல்.
ஒசூர் - தருமபுரி இடையேயான 2-ம் மற்றும் 3-ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும் அடிக்கல்.
மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கு அடிக்கல்.
பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்.
இது தவிர, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து மாலை 7.05 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார்.
பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 7.40மணியளவில் தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Airport, Narendra Modi, PM Modi