Home /News /tamil-nadu /

தேர்த் திருவிழாக்களில் கடைபிடிக்க வேண்டிய விபத்து தடுப்பு முறைகளும், தேரின் அம்சங்களும்... ஒரு சிறப்பு பார்வை

தேர்த் திருவிழாக்களில் கடைபிடிக்க வேண்டிய விபத்து தடுப்பு முறைகளும், தேரின் அம்சங்களும்... ஒரு சிறப்பு பார்வை

தஞ்சை தேர் விபத்தில் சேதம் அடைந்த தேர்.

தஞ்சை தேர் விபத்தில் சேதம் அடைந்த தேர்.

இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அதை தொடர்ந்து கணகாணித்து வர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

  தேர்த்திருவிழாக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதே அளவுக்கு சில நேரங்களில் விழாக்களின் நடைபெறும் விபத்துகள் வேதனையைத் தந்து விடுகின்றன. இதைத் தடுக்க அரசு ஏற்கெனவே அறிவித்த விதிமுறைகள் என்ன? என்பதையும், தேரின் அம்சங்கள் குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு...

  தமிழ்நாட்டில் மண்ணோடும் மக்களோடும் கலந்துவிட்ட கலைகளில் தேரோட்டமும் ஒன்று. சிறுமலைபோல் அசைந்தாடி வரும் தேரின் அழகை பார்த்து ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.

  ஒரு தேரை உருவாக்கும்போதே, அது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிப் பகுதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுவது முதல் சிறப்பு. அரசர்களின் ஆட்சிப் பகுதிக்கு ஏற்ப திருவாரூர் ஆழித்தேர் முதல் ஆண்டாள் கோயில் தேர் வரை சில வித்தியாசங்கள் இருக்கும்.

  ஆனால் அனைத்து தேர்களுக்கும் பொதுவான மரபுகள் உண்டு. தேர் உருவாக்கப்படும்போது எந்த கோயிலுக்கானது என்பதை தெரிந்து கொண்டு, அக்கோயிலின் மூலவர் உயரத்தையோ, கோயில் கோபுரத்தின் உயரத்தையோ, கருவறை விமானத்தின் உயரத்தையோ பிரதிபலிக்கும் வகையில் உருவாக்குவதுதான் மரபு.

  இதையும் படிங்க - ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.35 லட்சம் இழந்த இளைஞர் தற்கொலை.. சென்னையில் சோகம்!!

  இவ்வாறு உருவாக்கப்படும் தேர்கள் ஆறு அடுக்குக்கு மேல் இருக்காது. பூதப்பார், விக்கிரகப்பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் ஆகியவையே அந்த 6 அடுக்குகள்.

  சிம்மாசனத்தில் சாமி சிலைகள் வைக்கப்பட்டு, சிம்மாசனத்தைச் சுற்றி யாளிக்கட்டை, சிங்கக்கட்டை, அஸ்தியாளி கொண்டு மறைக்கப்படும். தேர் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதன் முகப்பில் 2 அல்லது 4 குதிரைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி.

  தேர்கள் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு, சக்கரங்கள் இலுப்பை கட்டைகளால் செய்யப்படுவதுதான் பாரம்பரிய மரபு. ஆனால் அண்மை காலங்களில் சக்கரத்தையும் தேக்கு மற்றும் இரும்பால் செய்யப்படும் முறை அதிகரித்து வருகிறது.

  எந்த கோயில் தேராக இருந்தாலும், அதில் சுமார் 200 சிலைகள் செதுக்கப்பட்டிருப்பது சாதாரணம். கோயிலின் மரபு மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்படுவது இயல்பாகும்.

  இதையும் படிங்க - அரசுப் பள்ளியில் அதிகரிக்கும் மாணவர்களின் அத்துமீறல்கள்... விதிகள் என்ன? தீர்வு எது?

  தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்த்திருவிழா ஆடம்பரமாக நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.

  பட்டுத் துணி மற்றும் மலர்களால் அலங்கரித்து, ஊர் கூடி தேர் இழுக்க மக்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி மக்கள் வாழவும் வேண்டி காலங்காலமாக தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

  அகண்ட வீதியில் அசைந்தாடி வரும் தேருக்கு, கைப்பிள்ளையாக சப்பரங்கள் வருகின்றன. தேர்கள் செல்ல முடியாத சிறு வீதிகளின் உள்ளே சாமி சிலைகளுடன் சென்று மக்களுக்கு இந்த சப்பரங்கள் அருள் பாலிக்கின்றன.

  முந்தைய ஆண்டுகளில் மனிதர்கள் மட்டுமே சுமந்து சென்ற சப்பரங்களை தற்போது வாகனங்களும் சுமந்து செல்கின்றன. சில ஊர்களில் தேர்கள் இல்லாமல், சாமி சிலைகளுடன் சப்பரங்களை மட்டுமே வைத்து திருவிழாக்கள் நடத்தப்படுவதும் உண்டு.

  தேர்களோ, சப்பரங்களோ வீதிகளில் செல்லும்போது மகிழ்ச்சி என்பதோடு, பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் தரப்படும். தேர் பின்னால் வர, பல அடி நீள குச்சிகளோடு சிலர் முன்னால் செல்வார்கள்.

  வழியில் குறுக்கிடும் மின்கம்பிகளை தூக்கிப் பிடித்து, தேரையும், ஊரையும் பாதுகாப்பது அவர்களின் வேலை. தேர்த் திருவிழாவை கவனத்தில் வைத்து பல ஊர்களில் மின்கம்பிகளை சாலையின் குறுக்கே செல்ல அனுமதிப்பதே கிடையாது மக்கள்.

  இவ்வாறு, தமிழர்களுக்கும், தமிழுக்கும் மட்டுமே சொந்தமான அழகிய விழா தேர்த்திருவிழா. ஆனந்தமாக கொண்டாடப்படும் இந்த தேர்த்திருவிழாக்கள், அண்மை காலங்களில் சோகத்தில் முடிவடைவது வேதனை.

  2012, மே 1ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கைலாசநாதர் கோயில் தேர் கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் அடுத்த நாளே பக்கத்து மாவட்டமான வேலூரில் நெல்லூர்ப்பேட்டை கருப்புலீஸ்வரர் தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழந்தனர்.

  இந்த விபத்துகளால் அதிர்ந்து போன அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தேரோட்டங்களை நடத்துவதற்கு சில விதிமுறைகளை அறிவித்தார். மாலை 6 மணிக்குள் தேரோட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும்.

  தேரோட்டத்திற்கு முன்னதாக பொதுப்பணித்துறையைச் சேர்ந்தவர்கள் தேரின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அவற்றுள் சிலவாகும்.

  அரசின் விதிமுறைகள், அடுத்த சில மாதங்களிலேயே காற்றில் பறக்கவிடப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர் விபத்துகள் நடப்பது தொடர்கதையானது.

  அண்மையில், கள்ளக்குறிச்சி அருகே எலவனாசூர்கோட்டையிலும் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், நாமக்கல்லில் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போது உயரழுத்த மின் கம்பியில் உரசி, மின் ஊழியர் காயமடைந்தார்.

  அதேபோல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தஞ்சையில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம். இனியும் இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அதை தொடர்ந்து கணகாணித்து வர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக, பெரிய பத்மநாபன்...
  First published:

  Tags: Festival, Fire accident

  அடுத்த செய்தி