அத்திவரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் இன்று வருகை!

விஐபி, பொதுதரிசன நேரத்தில் மாற்றம் : காலை 10 முதல் மாலை 5 மணி வரை விஐபி தரிசனம் கிடையாது. பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை பொதுதரிசனம் கிடையாது

Web Desk | news18
Updated: July 12, 2019, 7:55 AM IST
அத்திவரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் இன்று வருகை!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
Web Desk | news18
Updated: July 12, 2019, 7:55 AM IST
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இதனையொட்டி, பொது தரிசனம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் உற்சவம், கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

வி.ஐ.பி.க்கள் உள்பட பக்தர்கள் வருகை அதிகரித்துவருவதால், காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்க இன்று வருகை புரியவுள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானத்தில் நண்பகல் 12 மணிக்கு புறப்படும் குடியரசுத் தலைவர், சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 2:10 மணிக்கு வந்தடைகிறார்.

அத்திவரதர்


அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குகிறார். குண்டு துளைக்காத காரில் வடக்கு மாடவீதி வழியாக, வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு கோபுரத்திற்கு வந்தடைவார். பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் குடியரசுத் தலைவருக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதையொட்டி, விஐபி தரிசனத்திற்கு 10 முதல் 5 மணி வரை அனுமதி இல்லை. இதே போல, பொது தரிசனத்திற்கு 1 முதல் 5 மணி வரை அனுமதியில்லை. குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, காஞ்சிபுரத்தில் 3,500 போலீசாரும், துணை ராணுவப் படையினர் 100 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வரதராஜர் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, சென்னை விமான நிலையம் வரும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இரவில் தங்குகிறார். மேலும், ஆந்திரப்பிரதேசத்தின் ரேணிகுண்டாவுக்கு நாளை பிற்பகல் புறப்படுகிறார்.

பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஹெலிபேடு உள்ளதால், தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அப்பகுதியிலேயே சற்று தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இன்று பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், மாலை 5 மணிக்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... 
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...