தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பம்மல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்கக்கோரி பூபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அரசு நிலங்களும், தனியார் நிலங்களும் பதிவு செய்யப்படுவதாகவும், பழைய ஆவணங்களுக்கு பதில் புதிய ஆவணங்கள் பதிவு செய்து வைக்கப்படுவதாகவும், பழைய ஆவணங்கள் சேதமடைந்துவிட்டதாக பதிவுத்துறை அதிகாரிகள் கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சைதாப்பேட்டை சார் பதிவாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இன்று விசாரணைக்கு சார் பதிவாளர் நேரில் ஆஜராகியிருந்தார். ஆவணங்கள் எப்படி பாதுகாக்கப்படுகிறது என அவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சார் பதிவாளர் பெரிய கவர் ஒன்றில் ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
நிலங்கள் தொடர்பான 200 ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் இல்லை என தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, கவனக் குறைவாகவும், மெத்தனமாகவும் ஆவணங்கள் வைக்கப்பட்டு, சேதமடையச் செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
ஆவணங்கள் சேதமடைவதால், சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் கேள்விக்குள்ளாக்கப்படுவதாக கூறிய நீதிபதி, ஆவணங்கள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், அதற்கு அதிகாரிகள் கடமையை செய்யத் தவறுவதே காரணம் என்று கண்டனம் தெரிவித்தார்.
இதேபோல, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, பத்திரப்பதிவு அலுவலகங்களில் சோதனை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள் காட்டிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள விவரங்களை பார்க்கும்போது, சோதனை, விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது எனவும், பதிவுத்துறையில் ஊழல் படிந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
ஆவணங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன், இதுசம்பந்தமாக நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.
மேலும், பதிவுத்துறை அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக குற்றம்சாட்டிய நீதிபதி, 2016 முதல் 2018-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
Published by:DS Gopinath
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.