முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மோடி, மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன், ஸ்டாலின்...! யார் இந்த பிரசாந்த் கிஷோர்...?

மோடி, மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன் மோகன், ஸ்டாலின்...! யார் இந்த பிரசாந்த் கிஷோர்...?

மு.க.ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்

மு.க.ஸ்டாலின் - பிரசாந்த் கிஷோர்

  • Last Updated :

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்காக பணியாற்ற உள்ளார்.

இந்தியாவில் தேர்தல் வியூக நிபுணர்களில் முக்கியமானவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர், Indian Political Action Commitee எனப்படும் ஐ-பேக் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். அந்த நிறுவனத்துடன் கைகோர்ப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலுக்காகவும், தமிழகத்தின் பொழிவை மீட்டெடுப்பதற்காகவும், ஐ-பேக் நிறுவனத்தின் இளம் அணியுடன் பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுகவின் வெற்றிக்காக உழைக்க வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என ஐ-பேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டில் குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று 3-வது முறையாக முதலமைச்சரான போது, பிரசாந்த் கிஷோரின் பெயர் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. 2013-ஆம் ஆண்டு பொறுப்புள்ள ஆளுமைக்கான குடிமக்கள் என்ற பெயரில் ஊடக நிறுவனம் ஒன்றை தொடங்கிய பிரசாந்த் கிஷோர், 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பக்கபலமாக இருந்து வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது.

அதன் பின்னர், தனது நிறுவன பெயரை ஐ-பேக் என மாற்றிய அவர், கட்சி பாகுபாடின்றி அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணிகளுக்காக திறமையான இளைஞர்களை பணியமர்த்தினார்.

2015-ஆம் ஆண்டு பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறவும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும், பிரசாந்த் கிஷோர் பின்னணியில் இருந்து தேர்தல் வியூக நிபுணராக பணியாற்றினார்.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரை நாடிய ஜெகன் மோகன் ரெட்டி, 2019 ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றார்.

2017 உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், பிரியங்கா காந்தியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென கூறியதாகவும், அதற்கு காங்கிரஸ் மறுத்ததாகவும் கூறப்பட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்த பிரசாந்த் கிஷோர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசியதால் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக, திமுக என இரு கட்சிகளிடமும் பிரசாந்த் கிஷோர் பேசிவருவதாக கூறப்பட்ட நிலையில், திமுகவிற்கு பணியாற்ற பிரசாந்த் களமிறங்கியுள்ளார். அவரின் மேஜிக் தமிழகத்தில் எடுபடுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

top videos

    First published:

    Tags: MK Stalin, Prashant Kishor