இறந்தவர்கள் பெயரிலும் வீடு.. பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் பல லட்சம் மோசடி..

Youtube Video

இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் மேலும் சில அரசியல் ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் என்ற கிராமத்தில் 240-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் உள்ளன. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இவர்களில், பலர் விவசாய கூலி தொழிலாளர்களே அதிகம். மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இங்குள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர 2017-19-ஆம் ஆண்டுகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

  அதன்படி, கான்கிரீட் வீடு ஒன்றிற்கு 1,70,000 ரூபாய், வீட்டின் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆனால் விண்ணப்பதாரர்கள் பலரது வங்கிக் கணக்கில் இன்னும் பணம் வரவில்லை. ஆனால், வீடு கட்டி முடிக்கப்பட்டதாக, இவர்களது பெயரில் வேறு ஒருவரது புகைப்படத்துடன் கூடிய கடிதம் மட்டுமே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தலையாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  இந்த மோசடியின் உச்சகட்டமாக, இறந்தவர்கள் பெயரிலும் வீடு கட்டியதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கு வீடு கட்டியதாக கடிதம் வந்துள்ளது. ஆனால் 2016-ஆம் ஆண்டிலேயே கோவிந்தன் உயிரிழந்து விட்டார்.

  வீடு கட்டியதாக கூறி, அரசு ஊழியர்கள் துணையோடு, சில அரசியல் பிரமுகர்களும் பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல, ஜெயச்சந்திரன், சிவபாக்கியம் என இறந்தவர்கள் பலரது பெயரில் வீடு கட்டி முடித்துவிட்டதாக கூறி, இதுவரை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.

  இதே தலையாமங்கலம் கிராமத்தில், வீடுகள்தோறும் கழிவறை கட்டி தருவதாக கூறிவிட்டு, ஒருசிலருக்கு மட்டுமே கழிவறை கட்டித்தந்துவிட்டு, சுமார் 218 பேருக்கு கட்டி தந்ததாக கூறி 26 லட்சம் ரூபாய் வரை அரசு ஊழியர்கள் துணையோடு, அரசியல் பிரமுகர்களும் மோசடியில் ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  தலையாமங்கலம் கிராமத்தை தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி, கர்ணாவூர், தேவேந்திரபுரம் என மாவட்டம் முழுவதும் மேலும் சில பகுதிகளிலும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மாவட்ட கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி திட்டத்தின் இயக்குனருமான கமல் கிஷோர் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.

  இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் மேலும் சில அரசியல் ஊழியர்களும், அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Sankaravadivoo G
  First published: