முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிராமங்களில் தொடரும் மின்வெட்டு.. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குவதாக தகவல்

கிராமங்களில் தொடரும் மின்வெட்டு.. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குவதாக தகவல்

மின்தடை

மின்தடை

Power Cut in Tamil Nadu : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. கிராமங்களில் மின் தடை இன்னமும் தொடர்வதாகவும், சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நகரப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் இரவு பத்தரை மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணியைக் கடந்தும் மின்சாரம் வராததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் இருந்து தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. ஏசி ,மின் விசிறி இயங்காத காரணத்தால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வெளியில் வந்து அமர்ந்திருந்தனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் இருள் சூழ்ந்தது.

இதேபோல, தூத்துக்குடி நகா்பகுதி மற்றும் வாகைக்குளம், தெய்வச் செயல்புரம், சாத்தான்குளம், உடன்குடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பல இடங்களில் மின்வெட்டு தொடர்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், உறையூர், ராஜா காலனி, கருமண்டபம் மற்றும் பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது. பகல் நேரம் மட்டுமன்றி இரவிலும் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதேப்போல் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், புழுக்கம் தாங்காமல், வீட்டிற்கு வெளியே தஞ்சமடைந்தனர்.

கடலூர் மாவட்ட நகர் பகுதியில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணி அளவில் மின்வெட்டு நிறுத்தப்பட்டு பத்து மணி அளவில் மீண்டும் கொடுக்கப்பட்டது. இதேபோல் பண்ருட்டி, விருதாச்சலம், நெல்லிக்குப்பம் நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.

Read more : 'மணக்கோலம் கொண்ட மறுநாளே விதவைக் கோலம்..' கூவாகம் திருவிழா முடிந்து பிரியாவிடை பெற்ற திருநங்கைகள்

இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவுவரை, தொடர்ந்து அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மின் விசிறி இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.

இது குறித்து தகவல் அறிய ஒருவர் களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தின் சேவை கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து கேட்டபோது, அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் அளித்ததோடு அமைச்சருக்குதான் தெரியும் அவர்தான் சொல்வார் எங்களுக்கு தெரியாது என்று பதில் அளிக்கும் ஆடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், கிராமங்களில் மின் தடை இன்னமும் தொடர்வதாகவும், சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Must Read : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு... சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை

top videos

    இதனிடையே, அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகா வாட் திடீரென தடைபட்டதே இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க மின் வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Power cut, Senthil Balaji