தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்

ஓபிஎஸ்- இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  ஓ.பன்னீர் செல்வத்தைக் கலந்து ஆலோசிக்காமல் செயல்பட்டால் அ.தி.மு.க அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி தோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அ.தி.மு.கவிற்குள் இழுபறி நீடித்தது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தீவிர முயற்சி செய்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டுவந்தனர். அது அ.தி.மு.கவிற்குள் மோதல்போக்கு உள்ளதைக் காட்டியது. இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 9 மாவட்டச் செயலாளர்களுடன் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், ஓ.பன்னீர் செல்வம் சொந்தவேலையின் காரணமாக பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு இடையில், மீண்டும் கட்சிக்கு வருவேன். கட்சியைச் சீர் செய்வேன் என்று அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோவும் வெளியாகிவருகிறது. இந்தநிலையில், திருநெல்வேலியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், ‘அ.தி.மு.க கட்சி செயல்பாடுகளில் அம்மாவால் அடையாளம் காணப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே.. அவ்வாறு செய்ததால்தான் தேர்தலில் தோற்றுப்போனாம். இனிமேலும் தொடர்ந்தால் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: