தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள முதியோர், மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை வழங்கக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவின்படி பட்டியல் வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் தபால் வாக்கு பதிவு செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க, தபால் வாக்கு உறைகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் தி.மு.க தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், பெரும்பாலான இடங்களில் தபால் வாக்காளர்களின் பட்டியலை தங்களுக்கு வழங்காமலே தபால் வாக்குகள் பெறப்பட்டு வருவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான ஜி.ராஜகோபாலன், மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்ததாகவும், பட்டியல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே தபால் வாக்குகளை பெற தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தபால் வாக்குகள் பெறும் போது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், தற்போதைய நிலையில் இதுபோன்ற புதிய நடைமுறையை மேற்கொள்ள முடியாது என்றும், தொகுதியில் ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
திருவெறும்பூரை திமுக கோட்டையாக மாற்றுங்கள்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தபால் வாக்குகளில் முறைகேடு செய்ததாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில், அவற்றை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர், திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.