• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு - பரிசோதனைகளுக்கு முன்வராத மக்கள்

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு - பரிசோதனைகளுக்கு முன்வராத மக்கள்

உடல் பரிசோதனை

உடல் பரிசோதனை

விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது அச்சத்தின் காரணமாகவோ மருத்துவமனை சென்று கொரோனாவுக்கு பிந்தைய பரிசோதனைகளை செய்து கொள்ளாமல் இருப்பது கொரோனாவை விட ஆபத்தாகும்.

  • Share this:
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் பல்வேறு உறுப்புகளை தாக்குகிறது. ஆனால் அதன் தீவிரத்தன்மை தெரியாமல் உரிய நேரத்தில் பலர் மருத்துவமனையை நாடுவதில்லை.சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் துறை சார்ந்த நிபுணர்களுடன் கூடிய post covid follow up clinic அமைக்கப்பட்டுள்ளது.

முதல் அலைக்கு பிறகு 1300 பேர் இந்த கிளினிக் வந்து உடல் நிலை பரிசோதனை செய்து கொண்டனர். பல ஆயிரம் பேருக்கு இரண்டாவது அலையில் சிகிச்சை வழங்கப்பட்ட மருத்துவமனையில் இது வரை post covid clinic ல் 100 பேர் மட்டுமே வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு பிந்தைய கரும்பூஞ்சை பாதிப்பால் 863 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இது குறித்து பேசிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், "பாதிப்பின் சில முதல் கட்ட அறிகுறிகளை நிபுணர்களால் மட்டுமே கண்டறிய முடியும். கொரோனாவுக்கு பிறகான பரிசோதனைக்கு வந்தால் மட்டுமே அதை கண்டறிய முடியும். சர்க்கரை, காது மூக்கு தொண்டை, கண், மனநலம், நரம்பியல் என துறை சார்ந்த நிபுணர்களிடம் ஒரே இடத்தில் பரிசோதித்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பிறகே மருத்துவமனைக்கு வருகின்றனர்" என்று கூறுகிறார்.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளின் அறிகுறிகளை முதல் கட்டத்திலேயே கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் பலருக்கு கண்கள் பாதிக்கப்படுகின்றன.   ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 863 பேரில் கிட்டத்தட்ட 50% பேருக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கரும்பூஞ்சை பாதிப்பின் மூன்றாவது கட்டத்தில் தான் கண்கள் பாதிக்கிறது. முதல் இரண்டு கட்டத்தில் காது மூக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்படும். இது வரை  372 பேருக்கு கரும்பூஞ்சையால் கண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் 35 பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே வந்தால் கண் பார்வை இழக்காமல் பாதுகாக்கலாம் என்று கண் மருத்துவ பேராசிரியர் மலர்விழி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

தடுப்பூசியின் பலன் கொரோனா பாதிப்பில் மட்டுமல்லாது கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பிலும் கை கொடுப்பதாக கண் மருத்துவ பேராசிரியர் யோகேஸ்வரி கூறுகிறார். கண் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்ற 372 பேர், கண்கள் அகற்றப்பட்ட 35 பேர் என இவர்களில் ஒருவர் கூட இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி முடித்தவர்கள் கிடையாது என்கிறார். ஒரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருந்தது என அவர் மேலும் விளக்குகிறார்.

விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது அச்சத்தின் காரணமாகவோ மருத்துவமனை சென்று கொரோனாவுக்கு பிந்தைய பரிசோதனைகளை செய்து கொள்ளாமல் இருப்பது கொரோனாவை விட ஆபத்தாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: