ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை, நான் செய்வதை தான் அவர் சொல்கிறார் - முதல்வர் பழனிசாமி

ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை, நான் செய்வதை தான் அவர் சொல்கிறார் - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்னால் உதயநிதி என வாரிசு அரசியல், குடும்ப அரசியல் .. திமுக கட்சியல்ல அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி.

 • Share this:
  ஸ்டாலின் சொல்வதை நான் செய்யவில்லை. நான் செய்வதை தான் அவர் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.

  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு போரூரில் பிரச்சாரம் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மக்கள் எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். நான் ஒரு விவசாயி. ஒரு விவசாயியின் துன்பம் என்ன என்பதை நான் அறிவேன்.தேர்தல் வருவதற்கு முன்னதாக பலர் வாக்குறுதி அளிக்கலாம் ஆனால் தேர்தலுக்கு முன்னதாக வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களை சந்திக்கும் கட்சி அதிமுக.

  ஊர் ஊராக சென்று பெட்டி வைப்பது மக்களை ஏமாற்ற ஸ்டாலின் போடும் நாடகம். நீங்கள் நன்மை செய்திருந்தால் பெட்டி வைக்க வேண்டிய அவசியம் இல்லையே. 100 நாட்களில் வேலை செய்து மக்கள் பிரச்னைக்கு தீர்வு அளிப்பேன் எனக் கூறும் ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது செய்தது என்ன? மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி தொடரும்.

  சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்த ஆட்சியில் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை கிடையாது, கட்ட பஞ்சாயத்து கிடையாது. ஆனால் திமுகவினர் பிரியாணியையும் புரோட்டாவையும் தின்றுவிட்டு பிரச்னை செய்கின்றனர். மக்களிடம் கொடுப்பதற்காக உழைக்கும் கட்சி அதிமுக. மக்களிடம் இருந்து பிடுங்கும் கட்சி திமுக.

  கொரோனா வைரசை இந்திய அளவில் அதிக அளவில் கட்டுப்படுத்தியது தமிழகம் பாரத பிரதமரே இதனை பாராட்டியுள்ளார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க முடியுமென்றால் அது ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்னால் உதயநிதி என வாரிசு அரசியல், குடும்ப அரசியல் .. திமுக கட்சியல்ல அது ஒரு கார்ப்ரேட் கம்பெனி.

  வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும். அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. இங்கு ஒரு தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம். அதிமுக இன்னும் 3 மாதம் தான் என பேசுகிறார் ஸ்டாலின். இதை தான் 4 ஆண்டுகளாக ஸ்டாலின் கூறி வருகிறார். எதுவும் நடக்கவில்லை. நகர்புறங்களில் ஏழைகள் எங்கு இருந்தாலும் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டித் தருகிறோம். கிராமங்களில் பட்டா வழங்குகிறோம்.

  சென்னை மக்களுக்கு இன்னும் ஓர் ஆண்டுக்கு தேவையான குடிநீரை தேக்கி வைத்துள்ளோம். குடிமராமத்து ஒரு சிறந்த திட்டம். அது போன்ற பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்றார்.
  Published by:Vijay R
  First published: