பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையில், அவரது வார்த்தையை ஆர்.எஸ்.எஸ். உடைய வார்த்தையாக பார்ப்பதாக பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் . இவர்கள் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.
ஆளுநரின் இந்த கருத்து தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அரசியல் லாபத்திற்காக இயங்கும் அமைப்பு அல்ல, மக்களின் உரிமைக்காக இயங்கும் அமைப்பு. ஆளுநரின் வார்த்தை என்பதை ஆர்.எஸ்.எஸ். வார்த்தையாகவே பார்க்கிறேன்.
இதையும் படிங்க: பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
பாஜகவின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் நபராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். நாகலாந்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருக்கு அங்கு எப்படி மதிப்பு இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். தமிழக மக்களின் உரிமைகளில் தலையிடும் விதமாக ஆளுநரின் செயல் உள்ளது.
அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூவுபவர்கள் தீவிரவாதிகள் என்று ஆளுநர் பேசியுள்ளார். இன்றைய சூழலில் அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் யார் என்று அனைவருக்குமே தெரியும். ராமநவமி, இந்துக்களின் திருவிழாக்களில் கலவரத்தை ஏற்படுத்தும் செயலில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருகிறது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம் என கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.