நியூட்ரினோ திட்டம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய கருத்துக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கோ, வன விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையானது தகுதியற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தண்ணீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ள மட்டுமே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிபுணர்கள் உள்ளனர். நியூட்ரினோவிற்கு பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்து பெறப்பட வேண்டியிருப்பதால் அத்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அக்குழு அளிக்கும் முடிவின் அடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான அனுமதி வழங்க முடியும் எனக் கூறியிருந்தது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்பது இத்திட்டத்திற்கு எதிரானதாகவே இருந்தது.
தற்போதுவரை இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில் எந்த ஆதாரங்களை வைத்து தமிழக முதல்வர் மேற்கண்ட தனது கருத்தை தெரிவித்துள்ளார் என்பதை விளக்க வேண்டும். இந்த திட்டமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 4.9 கி.மீ தூரத்தில்தான் உள்ளது என்பதை துணைமுதல்வர் அறிவாரா? இத்திட்டத்திற்கு தேசிய வனவிலங்குகள் நல வாரியத்தின் அனுமதி அவசியம் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்ததை துணைமுதல்வர் அறிவாரா? இப்படி பல சூழலியல் சிக்கல்கள் சூழ்ந்துள்ள ஒரு திட்டத்திற்கு சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய ஆய்வுகள் இன்னும் செய்யப்படாமல் உள்ள நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான தமிழகத்தின் துணை முதல்வர் பொய்யான கருத்துக்களை தெரிவித்திருப்பது அவரது சொந்த மாவட்டத்தின் மீதே அவரின் அக்கறையின்மையை காட்டுகிறது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neutrino Project, O Panneerselvam, OPS, Poovulagin Nanbargal, Theni