பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதன் காரணமாக, ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் பொதுமக்களின் பயணத்தை சுலபமாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னையின் 5 பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் 12 முதல் 14ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,749 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கும் 6,183 சிறப்பு பேருந்துகள் என பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக 16 முதல் 18ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 2,100 பேருந்துகளுடன் 4,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மற்ற முக்கிய ஊர்களுக்கும் சேர்த்து 15,599 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வெளிவட்ட சாலை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லும். தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து செல்ல முன்பதிவு செய்தவர்கள் அங்கு ஏறிக்கொள்ளலாம். tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஊருக்கு செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். சென்னையிலிருந்து பேருந்துகள் வெளியேறும் வரை நெரிசல் வராமல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal festival, Special buses