பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் சுமார் 9 லட்சம் பேர் - சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் சுமார் 9 லட்சம் பேர் - சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
கோப்பு படம்
  • News18
  • Last Updated: January 19, 2020, 6:50 AM IST
  • Share this:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் சென்ற 9 லட்சம் பயணிகளில் பெரும்பாலானோர் இன்று சென்னை திரும்புவதால் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன்மூலம், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 9 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முடித்து, சொந்த ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு திரும்ப வசதியாக நேற்று முதல் அதே அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வரும்21-ம் தேதி வரை 30 ஆயிரத்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையோடு, வார விடுமுறையும் இன்றுடன் நிறைவடைவதால், பெரும்பாலானோர் இன்று சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டநெரிசலை கருத்தில் கொண்டு நேற்றிரவே சொந்த ஊர்களில் இருந்து பலர் கிளம்பியதால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.


சென்னை வரும் பயணிகள் வசதிக்காக கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகர எல்லையில் கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூர் வரை வாகன நெரிசலை தடுக்க போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் விரைவாக கடந்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் வெளியூர் சென்றுவிட்டதால் சென்னை நகரில் கடந்த ஒருவாரமாக போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் இனி வழக்கம்போல் பரபரப்படைய உள்ளன.
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்