• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொங்கல் தொகுப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் தொகுப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2500 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு

குடும்ப அட்டைகளுக்கு (Ration card) ரூ.2,500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம், பொங்கலுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதிஉதவியை நிறுத்துவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என விமர்சித்துள்ளார்.

  • Share this:
    பொங்கல் பண்டியையை ஒட்டி குடும்ப அட்டைக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    பொங்கல் பண்டியையை ஒட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கும்  பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு)  வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனுடன் கரும்பும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனுடன் சேர்த்து குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2500 வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது என்றாலும், 2020 ஆண்டிலிருந்து நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. இதற்கென 2,363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது.




    இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் நிதி உதவி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது.


    ஆனால் ‘அதை செய்கிறேன், இதை செய்கிறேன்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படும் நிதி உதவியை கைவிட்டுவிட்டது. ‘நடைமுறையில் இருக்கும் திட்டத்தை கைவிடுவோம்’ என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததை தி.மு.க. அரசு செய்திருக்கிறது. இதற்கு பெயர்தான் ‘சொல்லாததையும் செய்வோம்’ என்பது போலும் என்று விமர்சித்துள்ளார்.


    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஏழை, எளிய மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியான 2,500 ரூபாயை தொடர்ந்து அளிக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் ” என்று வலியுறுத்தியுள்ளார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: