பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் வரை நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 2 ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் முன் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு கிடைக்குமா என்று ரேஷன் அட்டைத்தாரர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் பொங்கலுக்கு முன் அனைவருக்கும் ரூ.1000 கிடைக்கும் விதமாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பரிசினை பொங்கல் திருநாளுக்கு முன்னர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13 (வெள்ளிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக ஜனவரி 27 (வெள்ளிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி வழங்கப்பட வேண்டும். அங்கீகாரச் சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்கள் பெறும் அட்டைத்தாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு வழங்கலாம். தொழில்நுடப இடையூறு உள்ளிட்ட காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத நேரங்களில் அதற்குரிய பதிவேட்டில் உரிய ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
பொங்கல் பரிசு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பொங்கல் பரிசு கொடுக்க ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறக்க வேண்டும். வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும்.வரிசையில் காத்திருந்தவர்களை திருப்பி அனுப்ப கூடாது. பொங்கல் பரிசு காரணமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாவண்ணம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
பொங்கல் பரிசு மற்றும் ரொக்க தொகை விநியோகம் குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal Gift