பொங்கல் சிறப்புப் பேருந்து: உற்சாகமாக சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள்

பொங்கல் சிறப்புப் பேருந்து: உற்சாகமாக சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகள்

பேருந்து

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

 • Share this:
  பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியுள்ளதால், பயணிகள் உற்சாகமாக சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.

  பண்டிகை காலங்களில் பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (11-ஆம் தேதி) முதல் 13-ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்துகளுடன், 4,078 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,993 சிறப்பு பேருந்துகள் என தமிழகம் முழுவதும் 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றுள் 10,071 சிறப்பு பேருந்துகள் அடங்கும்.

  பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்காக 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்துகளுடன், 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன. இதில் 9,120 சிறப்பு பேருந்துகள்.

  பேருந்துகளின் முன்பதிவு செய்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையமும் என 13 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள www.tnstc.in, www.redbus.in www.paytm.com www.busindia.com போன்ற இணையதளம் மூலமாகவும் tnstc official app மூலமும் பயணிகள் முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

  பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி, மாதவரம் புதிய பேருந்துநிலையம் - செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.

  கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம்- ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

  தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்) - திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் - திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

  பூந்தமல்லி பேருந்து நிலையம் - வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

  கோயம்பேடு பேருந்து நிலையம் - மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, சேலம், ராமநாதபுரம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.

  பொங்கல் பண்டிகைக்கு முன்பு 10,071 சிறப்பு பேருந்துகளும், பொங்கல் பண்டிகைக்கு பின்பு 9,120 சிறப்பு பேருந்துகளும் என 19,191 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

  கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டும் பேருந்துகள், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து, ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்ததுக்கு சென்று, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ள பயணிகளை ஏற்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நோய் தொற்று காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முககவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Suresh V
  First published: