Pongal 2021 | தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.. (வீடியோ)

Youtube Video

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

  • Share this:
    இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்படும் தை பொங்கல் விழாவின் முதல் நாளில் அதிகாலையிலே பொதுமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களை கட்டி புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர். சென்னை ராயபுரத்தில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஒன்றாக இணைந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.

    திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் உள்ள சின்னம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சமுதாய பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று கோ பூஜை செய்தார். அப்போது, தீயினால் சூட்ட புண் என்று துவங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியவர், பிறரை புண்படுத்தும் வகையிலான சொற்களை பயன்படுத்த கூடாது என்றார்.

    காஞ்சிபுரத்தில் கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், ஒரு டன் எடையிள்ள செங்கரும்புகளைக் கொண்டு 15 அடி உயரம், 13 அடி அகலமும் கொண்ட செங்கரும்பு பானையை வடிவமைத்து பொங்கல் வைத்து அசத்தினார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிகாலையில் சாரல் மழை பெய்த போதும், பொதுமக்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் தோரணம் கட்டி, கோலமிட்டு உற்சாகத்துடன் பொங்கல் வைத்தனர்.

    சேலம் அரிசிபாளையத்தில் நான்கு வீதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாடினர். வீடுகள் முன்பு தோரணங்கள் கட்டி வண்ணக் கோலமிடப்பட்டிருந்தன. இதில், சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள முளகுமூடு தூய மரியன்னை தேவாலயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. விவசாயமும், செழிக்க மக்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

    நாகையில் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் உட்பட திரளானோர் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர்.

    இதேபோன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஏழை, எளியோருக்கு புத்தாடைகளை வழங்கி போலீசார் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜனவரி 15, 2021)

    பொங்கல் பண்டிகையையொட்டி ஆலயங்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறையில் ஆயிரம் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை அம்பாளுக்கு 108 லிட்டர் நெய்யால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரியிலும் பொங்கல் விழா களைகட்டியது. துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த துணைராணுவப்படையினர் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து கடற்கரை சாலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

     






    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: