பேரவைக்குள் கஞ்சா பொட்டலங்களுடன் வந்த எம்.எல்.ஏ.

news18
Updated: July 12, 2018, 5:14 PM IST
பேரவைக்குள் கஞ்சா பொட்டலங்களுடன் வந்த எம்.எல்.ஏ.
பேரவைக்குள் கஞ்சா பொட்டலங்களுடன் வந்த எம்.எல்.ஏ. அன்பழகன் (நடுவில் உள்ளவர்)
news18
Updated: July 12, 2018, 5:14 PM IST
புதுச்சேரி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது மலிவாக கிடைக்கும் மது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் அங்கு தற்போது கஞ்சா விற்பனையும் அமோகமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் நிலையில், புதுச்சேரியில் தனியார் நிறுவனங்களும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளன. அங்கு அனைத்துவித மதுபானங்கள் மலிவு விலையில் கிடைப்பதால், அங்கிருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்தலும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி  சட்டப்பேரவையில் இன்று கஞ்சா பொட்டலங்களுடன் வந்து அதிமுக எம்எல்ஏ அன்பழகன் அதிர்ச்சி அளித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அன்பழகன் குற்றம்சாட்டியதையடுத்து, அதற்கு முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.

விழுப்புரம், திருவண்ணாமலையிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும், இதுவரை 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், போதைப் பொருட்கள் புழக்கத்தை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், தடை செய்யப்பட்ட கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் புதுச்சேரியில் அமோகமாக விற்பனையாவதாகவும், 15 வயது சிறுவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விடுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள வில்லியனூர், உருளம்பேட்டை, நெல்லித்தோப்பு நகரப் பகுதிகளில் கஞ்சா விற்பனைக்கென்றே பணியாட்கள் அமர்த்தப்பட்டு இருப்பதாகவும், போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்