கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடை தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் காலமானதால், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம். இதற்கிடையில், அதே தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை கொடுத்துள்ளார், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி.
இந்த தேர்தலில், பாஜக வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிப்பப் பட்டுள்ளது. அவருக்கு முழு ஆதரவு தரப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “என் மீது முழு நம்பிக்கை வைத்து எனக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளித்துள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது செய்த அனைத்து நல்ல காரியங்களையும் குமரி மக்கள் மனதில் வைத்துள்ளார்கள்” என்று கூற தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
Must Read : திரிணாமுல் காங்கிரஸ் புகார் - மோடியின் புகைப்படத்தை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
கடந்த மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் போட்டுயிட்ட பொன். ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.